அட்டகாசம்’ மிஷ்கின்!
படத்தில் பாடல் (அதிலும் 'மஞ்சள் சேலை’) இல்லை, அச்சுப் பிச்சு காமெடி இல்லை, பன்ச் வசனங்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, 'சந்தானம்’ இல்லை... இப்படிப் பல 'இல்லை’கள். ஆனால், இது இதுவரையிலான உங்களின் உச்சம் மிஷ்கின். அடர்ந்த காட்டில் கரடியும் புலிகளும் துரத்த, தன்னால் கொல்லப்பட்ட ஓர் ஆட்டுக்குட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஓர் ஓநாயின் கதையே படம்!
தர்ம நியாயத்துக்கு உட்பட்டு 'கொலைத் தொழில்’ செய்யும் நாயகன், இறுதியில் மனம் திருந்தும் கதைதான். ஆனால், அதற்கான திடுக் திரைக்கதை, மர்மமான ட்ரீட்மென்ட், மனிதம் உணர்த்தும் கதாபாத்திரங்கள்... என ஒவ்வொரு காட்சியும், அதன் பின்னணியும் ஆயிரமாயிரம் கதை சொல்கின்றன!
புலிகளின் வியூகங்களும், அதை முறியடிக்கும் ஓநாயின் ஆட்டங்களுமாக இடைவேளை வரை விறுவிறு திகுதிகுவென விரைகின்றன காட்சிகள். ஆனாலும், இது என்ன படம், ஏன் இத்தனை ஓட்டம், 'ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி’ இடையே என்ன தொடர்பு என்றெல்லாம் ஒரு மூலையில் சந்தேகங்கள் குடைந்துகொண்டே இருக்கின்றன. அந்த அத்தனை சந்தேகங்களையும் போக்க பெரிய ஒரு ஃப்ளாஷ்பேக்கை எதிர்பார்த்து நமக்குள் இருக்கும் சினிமா ரசிகன் காத்திருக்க, இரண்டு மெழுகுவத்திகளுக்கு இடையே மிஷ்கின் அதை அவிழ்க்கும் இடமும் விதமும்... அபாரம். எளிய வார்த்தைகள் மூலம் விரியும் அந்த வலியான கதை சொல்லல், நம் மனசுக்குள் விஷ§வலாக விரிவது, புது அனுபவம். நன்றி மிஷ்கின்!
அந்த மின்சார ரயில் துரத்தலும், ஓடும் காருக்குள் மிஷ்கின், வில்லனை வெளியேற்றும் சமயோசிதமும்... ஒரு ஆக்ஷன் படத்தின் உச்சகட்ட உதறல் கொடுக்கும் காட்சிகள்! அப்படியான விறுவிறு த்ரில்லருக்கான வியூகங்கள் மட்டுமே இருந்திருந்தால், இது இன்னொரு சினிமா. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அதன் பின்னணிக்கேற்ப வார்க்கப்பட்டிருப்பதும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒருவன் மனநிலையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை நச்நச்சென உணர்த்தும் காட்சிகளுமே, படத்தை வேறு தளத்துக்கு அழைத்துச்செல்கின்றன!
அத்தனை ரிஸ்க் எடுத்து ஸ்ரீ காப்பாற்றிய மிஷ்கினை, அவரே கொல்லவேண்டிய இக்கட்டுக்கு ஆளாகும் காட்சிகள், நிதர்சனத்துக்கு மிக நெருக்கம். படித்தவர்களும் பொறுப்பானவர்களும் தங்கள் கடமையை மறக்க, ஒரு பிச்சைக்காரனின் உதவியோடு நல்லது நடக்கும் ஆரம்பக் காட்சிகள், துப்பாக்கிச் சூடு வாங்கும் ஒவ்வொரு போலீஸும் விநோத வார்த்தை பிரயோகிப்பது, அம்மாவின் காலுக்குச் சூடு வைத்தவர்களின் காலைக் காயப்படுத்துவது, குண்டடி வாங்கிய எட்வர்டு அப்பாவிடம் வேறு வழி இல்லாமல் துப்பாக்கியைக் கொடுக்க, அவர் தான் தெரியாமல்கூட யாரையும் சுட்டுவிடக் கூடாது என்று தலைக்கு மேல் உயர்த்தி துப்பாக்கியை வெடிப்பது, அத்தனை போலீஸ் கும்பலிலும் நல்ல உள்ளம் படைத்த ஓர் அதிகாரி இருப்பது, எந்த போலீஸையும் கொல்லாமல் காயப்படுத்தி, மயக்கப்படுத்தி மிஷ்கின் தப்பிப்பதுமான காட்சிகளில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சக மனிதர்கள் மீது ப்ரியம் விதைக்கிறது திரைக்கதை.
போலீஸ் அதிகாரி ஷாஜி, திருநங்கை ஏஞ்சல் கிளாடி, மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன், சிறுமி சைதன்யா... என அறிமுகப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அசத்தல். வழக்கமான மிஷ்கின் சாயல் இல்லாமல், ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மையோடு இருப்பது ஆச்சர்யம்! ஆனால், தமிழ்நாட்டுக்குச் சம்பந்தமே இல்லாத 'சாமுராய்’ பாணி வாள் வீரர்களைப் புகுத்தி தன் டச் கொடுத்துவிட்டார் மிஷ்கின்.
மிஷ்கின்-ஸ்ரீ சந்திப்புக்குப் பிறகுதான் பரபரக்கிறது படம். ஆனால், அந்தச் சந்திப்புக்கான தேவை என்ன? 'ஆட்டுக்குட்டி’க் குடும்பத்தைக் காப்பாற்றுவது மட்டுமே நோக்கமென்றால், அதைத் தவிர்த்திருக்கலாமே ஓநாய்? நள்ளிரவுக்கு மேல் மிஷ்கினுக்கு அதீத மயக்க மருந்து செலுத்தி மேஜர் ஆபரேஷன் செய்கிறார் ஸ்ரீ. ஆனால், காலையிலேயே மயக்கம் தெளிந்து தப்பிவிடுகிறார் மிஷ்கின். தமிழ் சினிமாவின், 'இட்ஸ் எ மெடிக்கல் மிராகிள்’களில் இதுவும் ஒன்று!
ஆரம்பக் காட்சி முதல் இறுதி வரை யாரேனும் யாரையேனும் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆக்ஷன் த்ரில்லர் என்றாலும் இவ்வளவு வன்முறையா?
'புலி-ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி’ கதையை 'வணிக சமரசம் இல்லாமல்’ படைத்ததற்கும், 14 கொலைகள் செய்த ஒரு சீரியல் கில்லர் உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு நம் மனதை நெகிழ்த்தியதற்கும்... இந்த ஓநாயை ஆசை ஆசையாக அரவணைக்கலாம்!
- விகடன் விமர்சனக் குழு