Saturday, 21 December 2013

‘புறம்போக்கு’ பிரதர்ஸ்!

''லெனின்கிட்ட, 'ரஷ்யக் கலாசாரத்துல புரட்சி பண்றேன்னு சொல்லிட்டு, ஃப்ரெஞ்சு கலாசாரமான குறுந்தாடியை ஏன் வெச்சிருக்கீங்க?’னு கேட்டாங்களாம். 'புரட்சிங்கிறது நவீனத்தின் ஒரு வடிவம். அப்போ புரட்சி பண்ற நாங்க மாடர்னா, ஸ்டைலாதான் இருக்கணும்... அது ஒண்ணும் தப்பில்லை’னு சொன்னாராம் லெனின்!
சமூகத்துல பகை முரண்பாடு, பகையற்ற முரண்பாடுனு ரெண்டு பிரிவுகள்தான் இருக்கு. மொழி, சாதி, மத முரண்பாடுகள் பகையற்ற முரண்பாடு. வர்க்கரீதியிலான முரண்பாடுகள் பகை முரண்பாடு. நாம பகை முரண்பாடு களின் சிக்கல்களைத் தீர்ப்பதில்தான் முனைப்பு காட்டணும். ஆனா, ஆதிக்கச் சக்திகள் நம் கவனத்தைத் திசைதிருப்பி 'பகையற்ற முரண்பாடு’களோடு நம்மை மல்லுக்கட்ட வைக்குது!'' - இதுவும் இன்னமுமாக இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசிக்கொண்டே இருக்கலாம். பேச்சில் அடர்த்தியான சுவாரஸ்யம் சேர்ப்பவர், இந்த முறை 'புறம்போக்கு’ என்ற தலைப்போடு களம் இறங்குகிறார். படத்தின் ஆட்டநாயகர்கள்... ஆர்யா - விஜய் சேதுபதி!
''அழுத்தமான கதை, சிந்தனையைத் தூண்டும் திரைக்கதைதான் உங்க ஸ்டைல்... இப்போ நீங்களும் 'ஹீரோ ஃபார்முலா’வில் சிக்கிட்டீங்களா?''
''ஹீரோக்கள் என் ஃபார்முலாவுக்கு சிக்கியிருக்காங்கனு கொஞ்சம் மாத்தி யோசிங்க பிரதர். 'இயற்கை’ பட பட்ஜெட் இன்னும் பெருசா இருந்திருந்தா, அந்தப் படத்தை கல்ட் கிளாஸிக் தரத்துக்குப் பண்ணியிருக்க முடியும். படத்தோட பட்ஜெட்டை அதிகரிக்க, அதில் மார்க்கெட் வேல்யூ சேர்க்கணும். அதனால்தான், ஆர்யா ப்ளஸ் விஜய் சேதுபதி. அவங்க நடிக்கிறாங்களே தவிர, இது முழுக்க முழுக்க ஜனநாதன் சினிமாதான். ரெண்டு ஹீரோக்கள்... ஆனா, படத்துல ஒரு ஹீரோயின்தான். மூக்கும் மூக்கும் இடிச்சுக்கிட்டு ஆர்யா ஹீரோயினோட டூயட் ஆட மாட்டார். Confessions of an Economic Hit Man’ புத்தகமும் கையுமாத் திரிவார். விஜய் சேதுபதிக்கு ரயில்வே கலாசி கேரக்டர். இந்தக் 'கலாசி’ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தேடினோம். அது இந்தி, சம்ஸ்கிருதம், உருது மொழிகளில் கிடைக்கலை. பார்த்தா, அது அரபு வார்த்தை. 'கலாசி’ங்கிற வார்த்தைக்கு 'கைகளால் உழைப்பவன்’னு பொருள். விஜய் சேதுபதி கேரக்டரோட மனநிலை... ரொம்பப் புதுசா இருக்கும். அரிதிலும் அரிதான கேரக்டர். அதனால், இது ஆர்யா-விஜய் சேதுபதி நடிக்கும் ஜனநாதன் சினிமாவேதான்!''
 'புறம்போக்கு’ - படத்தின் கேன்வாஸ் என்ன?''
''பொருளாதார யுத்தம்! கண்ணுக்கே தெரியாத, நம்ம கவனத்திலேயே இல்லாத 10 குடும்பங்கள்தான் ஒட்டுமொத்த உலகத்தையும் கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்காங்கனு சொன்னா நம்புவீங்களா? 100 பணக்காரர்களுக்குத்தான் ஒட்டுமொத்த உலகமும் வேலை பார்க்குது. சுருக்கமா ஒரு வரலாறு சொல்றேனே... நெருப்புக்கு நிகராக, மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? மனித உழைப்பு சக்தி. ஒரு மனிதன் பத்து ஆடுகளை மேய்ப்பான், நாலு மனிதர்கள் பத்து பசு மாடுகளைப் பராமரிச்சு பால் எடுப்பாங்க, பத்து மனிதர்கள் ஏக்கர்கணக்கில் விவசாயம் பார்ப்பாங்கனு கண்டுபிடிச்சதுதான், மனுஷனோட மிக முக்கியமான கண்டுபிடிப்பு!
அதன் பிறகுதான் எந்த வசதிவாய்ப்பும் இல்லாத துண்டு மனிதனை, பண்ணை அடிமைகள் ஆக்கினாங்க பண்ணையார்கள். அதுதான் நிலப்பிரபுத்துவம். அப்போ பண்ணையில் இருக்கும் பசு மாடு போடுற சாணியை அடிமைகள் எடுத்துக்கலாம். அதுக்கு பண்ணையார் காசு எதுவும் வாங்கிக்க மாட்டார். 'ஆஹா... வள்ளல் ஆண்டை... நமக்கு சாணியை சும்மாவே கொடுக்கிறார்’னு அடிமைகள் பாராட்டிட்டு சாணியால வரட்டி தட்டி அடுப்பு எரிப்பாங்க. ஆனா, அந்த வரட்டி எரிஞ்சு பிறகு மிஞ்சுற சாம்பல் பண்ணையாருக்குச் சொந்தம். ஆக, சாணியை சாம்பலா மாத்துற அடிமைகளின் உழைப்பை பண்ணையார் இலவசமாச் சுரண்டினார். அதை உடைச்சுப் பிறந்ததுதான் முதலாளித்துவப் புரட்சி. ஆனா, அது மனிதனை உடல் உழைப்பைத் தாண்டி இயந்திரங்களை இயக்கத்தான் பயிற்சி கொடுத்தது. அதாவது, பண்ணை அடிமைகளை தொழிற்கூட தொழிலாளி ஆக்கியது. 'எட்டு மணி நேர வேலை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை’னு சட்டதிட்டங்கள் போட்டது, அந்த உழைப்பாளியின் உற்பத்தித்திறனை அதிகரிக்கத்தான். அந்த நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவப் புரட்சியும் இப்போ எப்படி பரிணாம வளர்ச்சி அடைஞ்சிருக்குனு 'புறம்போக்கு’ பேசும்!''
'ரொம்ப அடர்த்தியா இருக்கே... ப்ளேபாய் ஆர்யாவும், சின்சியர் விஜய் சேதுபதியும் செட் ஆகிட்டாங்களா?''
'' 'நான் கடவுள்’ பண்ணினாரே ஆர்யா... யார்கிட்ட அவர் சிக்குறார்ங்கிறதுதான் முக்கியம். இப்போ படத்துக்காக 'டேப் டான்ஸ்’ பயிற்சியில் ரொம்ப மும்முரமா இருக்கார். நான் எப்பவும் எந்த ஆர்டரும் இல்லாம படம் எடுப்பேன். 'இயற்கை’யில் க்ளைமாக்ஸ்தான் முதல்ல ஷூட் பண்ணேன். அந்த மாதிரி இல்லாம கொஞ்சம் ஆர்டரா ஷூட் பண்ணிக்கலாமானு மட்டும் சேதுபதி கேட்டார். அப்பத்தான் அந்த கேரக்டருக்குள் அவரால முழுசா இன்வால்வ் ஆக முடியும்னு சொன்னார். 'பேராண்மை’யில் 'ஜெயம்’ ரவி அந்தப் பொண்ணுங்களுக்கு மனித உழைப்பு பத்தி வகுப்பு எடுக்கிறதுக்கு முன்னாடி அவருக்கு நான் லெக்சர் எடுத்தேன். அதனாலதான், 'மனித உழைப்பைக் கழிச்சுட்டா கட்டிடம் வெறும் செங்கல்தான். இன்னும் கொஞ்சம் கழிச்சா, செங்கல்லும் வெறும் கணிமண்தான்’னு வந்த வசனங்களை அவர் பவர்ஃபுல்லா பேசினார். அதே மாதிரி இந்த இரண்டு ஹீரோக்களும் பிரிச்சு மேஞ்சிருவாங்க!''
''ஒரு பக்கம் மிஷ்கின் தன்கிட்ட பேசணும்னாலே, 'பத்து புத்தகங்களைப் படிச்சுட்டு வா’னு புத்தகங்களுக்கு நடுவுல இருந்து சொல்றாரு... மறுபக்கம் பிரபு சாலமன், 'நான் புத்தகங்களையே வாசிக்கிறதில்லை’னு சொல்றார். உதவி இயக்குநர்களுக்கு நீங்க என்ன சொல்றீங்க?''
''எந்தப் புத்தகத்தையும் படிக்காம இருக்கிறது தப்பு. எல்லாப் புத்தகங்களையும் படினு சொல்றதும் ரொம்பத் தப்பு. தேர்ந்தெடுத்துப் படிக்கணும். உதவி இயக்குநர்கள் மட்டுமில்லை, சினிமா ரசிகர்களும் The Five C’s of Cinematography’-ங்கிற புத்தகத்தைக் கண்டிப்பாப் படிக்கணும். கேமரா ஆங்கிள், கன்டினியூட்டி, கட்டிங், க்ளோஸ்-அப்ஸ், கம்போசிஷன் - இந்த அஞ்சு 'சி’-க்களைப் பத்தி அழகா விளக்கும் அந்தப் புத்தகம். கிட்டத்தட்ட 40 வருஷங்களுக்கு முன்னாடி எழுதப்பட்ட அந்தப் புத்தகம் இப்பவும் உபயோகமா இருக்குனு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சொல்லியிருக்கார். அந்தப் புத்தகத்தை எழுதிய ஜோசப், 'புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அஞ்சு சி தாண்டி இன்னொரு சி இருக்கு. அது சீட்டிங்’னு சொல்லியிருக்கார். ஏன்னா, சினிமால இல்லாத இடங்களை, பொருட்களை காமிச்சு ஏமாத்திரலாம். ஆனா, நான் என் படங்களுக்கு அந்த ஆறாவது 'சி’யை 'கிரியேட்டிவிட்டி’னு வெச்சுக்குவேன். அந்தக் கிரியேட்டிவிட்டியைத் தூண்டுறது வாசிப்புப் பழக்கம்தான். அந்தக் கற்பனை தரும் தன்னம்பிக்கைதான், ஆர்யாவை ஹீரோயின்கூட நிக்க வெச்சு ஸ்டில்ஸ் எடுக்காம, அவர் கையில் புத்தகத்தைக் கொடுக்க வெச்சிருக்கு. அதானல, வாங்க... வாசிப்போம் பிரதர்!''